இந்தியப் பெற்றோர்களிடம் நிலவி வரும் ‘அடிச்சால்தான் பிள்ளை வளரும்’ என்ற பழமைவாத சிந்தனை, சில நேரங்களில் எல்லை மீறி சித்திரவதையாக மாறுவதை வெளிச்சம் போட்டுக் காட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் அந்த வீடியோவில், ஒரு சிறுவனின் இரண்டு கைகளும் கட்டப்பட்டு, வீட்டின் மேற்கூரையில் இருந்து அவன் ஆபத்தான முறையில் தொங்கவிடப்பட்டுள்ளான். அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடந்த இந்த கொடூரத்தை, எதிரே இருக்கும் குடியிருப்பில் இருந்து கவனித்த அண்டை வீட்டார், சிறுவனின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை உணர்ந்து அதை வீடியோவாகப் பதிவு செய்தபடியே அந்தப் பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
WTF …. pic.twitter.com/Bj2QebTYg0
— Indrajit (@Lotus_indrajit) July 6, 2026
“>
இருப்பினும், தங்களின் தவறை உணராத அந்தப் பெற்றோர், “என் பிள்ளை, நான் அப்படித்தான் செய்வேன், எனக்குப் புத்தி சொல்ல வராதீர்கள்” என்ற தொனியில் தடித்த வார்த்தைகளால் அண்டை வீட்டாரிடம் ஆக்ரோஷமாக ஆர்கியூ செய்துள்ளனர். இந்த நெஞ்சை உலுக்கும் வீடியோவைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் “முறையான வளர்ப்பு முறையை நீங்கள் கற்றுக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் குழந்தைகளை இப்படிச் சித்திரவதை செய்யாதீர்கள்” என்று கொந்தளிப்பதுடன், குழந்தையைத் துன்புறுத்திய அந்தப் பெற்றோர் மீது சட்டப்படியான கடுமையான வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இணையவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
