பட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ் மற்றும் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடையேயான கருத்து முரண்பாடுகள் மேலும் தீவிரமடைந்து வருகின்றன.
அன்புமணிக்கு எதிரான 16 குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அவரிடமிருந்து உரிய விளக்கம் பெற கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதில் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் பதிலளிக்க அவகாசம் வழங்கப்பட்டது. எனினும், அந்தக் காலவரம்பு முடிந்த நிலையில், அன்புமணி பதில் அளிக்கவில்லை என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பா.ம.க. நிர்வாகக் குழுக் கூட்டம் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையேற்றார். மாவட்டத்தலைவர்கள், வன்னியர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அன்புமணிக்கு எதிரான நடவடிக்கைகள், ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிக்கைகள், மேலும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு பின், நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: “அன்புமணிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 16 குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க, நாம் ஆகஸ்ட் 31 வரை அவகாசம் வழங்கியிருந்தோம். ஆனால் அவர் எந்தவொரு விளக்கமும் அளிக்காததால், தற்போது செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள் பதிலளிக்க கட்சியினால் இரண்டாவது முறையாகக் காலவரம்பு வழங்கப்பட்டுள்ளது, அவர் பதிலளிக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் ” எனக் கூறினார். அத்துடன், கடந்த கூட்டத்தில் ராமதாஸ் மகள் காந்திமதி ஆகியவரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இதனால், அன்புமணிக்கு எதிராக கட்சி என்னவிதமான நடவடிக்கையை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு, பா.ம.க.வின் உள்ளக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
