கொடைக்கானலில், மெட்ராஸ் கெனைன் கிளப் மற்றும் கென்னல் கிளப் ஆஃப் இந்தியா சார்பில் இரண்டு நாட்கள் நடைபெற்ற தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி சுற்றுலா பயணிகளின் பார்வையை ஈர்த்தது. இந்த கண்காட்சியில், ஜெர்மன் ஷெப்பர்டு, ராட்வீலர், டாபர்மேன், லேப்ராடர், சிப்பிபாறை, ராஜபாளையம், கோம்பை உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட நாய் இனங்களை சேர்ந்த 365 நாய்கள் பங்கேற்றன. தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும் இருந்து நாய்கள் அழைத்து வரப்பட்டிருந்தன.

இந்த நிகழ்ச்சியில் நாய்களின் திறமைகளை மதிப்பீடு செய்யும் வகையில்,மோப்ப திறன் பராமரிப்பு நிலை கட்டளை கேட்பது உள்ளிட்ட 6 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

போட்டிகளில் சிறந்து விளங்கிய நாய்களுக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டன. சுற்றுலா பயணிகள் இந்த போட்டியை உற்சாகமாகக் கண்டு ரசித்தனர். போட்டியின் முடிவில், அனைத்து பிரிவுகளிலும்  சிறப்பாக செயல்பட்ட இங்கிலீஸ் ஷட்டர் இனத்தைச் சேர்ந்த நாய், நடிகர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் வளர்த்திருந்ததென்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாய் ‘ஒட்டுமொத்த சாம்பியன்’ பட்டத்தை வென்றது.

சுற்றுலா பயணிகள் பலர், அந்த நாயுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர். மேலும் இந்த கண்காட்சி, நாய்கள் வளர்ப்பு மற்றும் அதன் பராமரிப்பு பண்புகளை பொதுமக்கள் மத்தியில் பரப்பியதோடு, நாட்டின் பாரம்பரிய நாய் இனங்களின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது.