நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கமல்ஹாசன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விடயங்களைத் தெரிவித்தார்.
“எனது தயாரிப்பு நிறுவனமான ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ தயாரித்த ‘அமரன்’ திரைப்படத்திற்கும், தெலுங்கில் நான் நடித்த ஒரு திரைப்படத்திற்கும் விருது வழங்கப்பட உள்ளது. அதனைப் பெற துபாய்க்கு பயணிக்கின்றேன். விருதைப் பெற்ற உடனே மீண்டும் டெல்லிக்குச் செல்வேன்” எனத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறியதாவது: “வாக்காளர் பட்டியலில் என் பெயர் காணப்படவில்லை என்றும், அதில் குழப்பம் உள்ளது என்றும் நான் தான் நேரில் புகார் அளித்துள்ளேன். இது தொடர்பாக பெரிய சந்தேகம் ஏற்பட்டதால் அதிகாரிகளிடம் முறையான முறையில் தகவல் கேட்டுள்ளோம்.”
தெரு நாய்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், சமூக சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியவாறு தெரிவித்தார்:
“இது மிகவும் எளிதாக தீர்க்கக்கூடிய பிரச்சினை. உலகச் சரித்திரம் தெரிந்தவர்களும், சமூக சுகாதாரம் என்றால் என்னவென்று அறிந்தவர்களும் இந்தப் பிரச்சனையை நம்முடைய முக்கிய விசயமாக கருதவில்லை. நமக்காக சுமை தூக்கும் கழுதைகள் குறித்தும் யாரும் கவலைப்படுவதில்லை. கழுதைகளை காப்பாற்ற வேண்டும் என யாராவது பேசுகிறார்களா?”
“எல்லா உயிர்களையும் எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்பதே என் கருத்து. நாம் எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு முயற்சி செய்ய வேண்டும்” என்றார்.
மேலும் பிரதமர் மோடியின் தாயார் குறித்து அவமானகரமான வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், அவரது அபிப்பிராயம் கேட்டபோது, கமல்ஹாசன் கூறியதாவது: யாரையும் அவமானப்படுத்துவது போல யாரும் பேச வேண்டிய அவசியமில்லை” என அவர் தெளிவாகக் குறிப்பிட்டார்.
