இந்திய கிரிக்கெட்டில் 15 வயது 99 நாட்களேயான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் அறிமுகமாகி புதிய சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து இவருடைய இந்த அறிமுகம் 37 ஆண்டுகளுக்கு முன்பு தனது 16-வது வயதில் பாகிஸ்தானின் கராச்சியில் அச்சமின்றி களம் கண்ட சச்சின் டெண்டுல்கரின் அறிமுக ஆட்டத்தை நினைவூட்டும் விதமாக அமைந்துள்ளது. சச்சின் டெண்டுல்கர் தனது அறிமுக போட்டியில் 15 ரன்கள் மட்டுமே எடுத்தது போல, வைபவ் சூர்யவன்ஷியும் தனது முதல் சர்வதேச இன்னிங்ஸில் 10 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
இருப்பினும், சச்சின் அன்று பாகிஸ்தானின் அசுர வேகப்பந்து வீச்சை எதிர்கொண்டு காட்டிய அதே துணிச்சலையும், பயமற்ற ஆட்டத்தையும் சூர்யவன்ஷி தனது முதல் போட்டியிலேயே வெளிப்படுத்தியுள்ளார். நவீன டி20 கிரிக்கெட், ஐபிஎல் கலாச்சாரம் மற்றும் சமூக ஊடகங்களின் அதீத அழுத்தங்களுக்கு மத்தியில் களம் கண்ட வைபவ், மைதானத்தின் பிரம்மாண்டத்தைக் கண்டு சற்றும் அஞ்சவில்லை.
அதேபோல் அவர் எடுத்த ரன்கள் குறைவு என்றாலும், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பவர்பிளேயில் அவர் அடித்த 2 சிக்ஸர்கள் அவருடைய அசாத்தியமான திறமையையும், பயமில்லாத கிரிக்கெட் அணுகுமுறையையும் உலகிற்கு பறைசாற்றியுள்ளன.
இந்நிலையில் சச்சினின் அறிமுக ஆட்டம் எப்படி அவரது எதிர்கால சாதனைகளை அன்றே முழுமையாக கணித்திருக்க முடியாதோ, அதேபோல சூர்யவன்ஷியின் இந்த 14 ரன்களும் அவரது எதிர்காலத்தை இப்போதே முடிவு செய்துவிடாது. ஆனால், சர்வதேச கிரிக்கெட் என்ற மிகப்பெரிய மேடையின் அழுத்தத்தை உணர்ந்தும், சற்றும் தயங்காமல் அவர் காட்டிய ஆக்ரோஷம் இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு புதிய நம்பிக்கையை தந்துள்ளது.
