2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரைச் சேர்ப்பது குறித்து, தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்குப் பெரிய அளவில் அதிகாரம் இருக்க வேண்டியதில்லை என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் ஐந்து தேர்வுக்குழு உறுப்பினர்களின் முடிவே முதன்மையானது என்றும், அவர்களுக்கு அடுத்தபடியாக கேப்டனிடமும், அதன்பின்னரே பயிற்சியாளரிடமும் ஆலோசிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். தேர்வுக்குழுவினர் தங்கள் வேலையைச் சரியாகச் செய்தால், அணி நிர்வாகம் அல்லது பயிற்சியாளரின் தலையீடு தேவையில்லை என்று கபில்தேவ் தெளிவுபடுத்தியுள்ளார்.

2027 உலகக் கோப்பையின் போது கோலிக்கு 39 வயதும், ரோஹித்துக்கு 40 வயதும் ஆகும் என்பதால், இந்த வயதில் அவர்கள் ஃபார்ம் அவுட் ஆனால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

20 வயது இளம் வீரர் ஒருவர் சரியாக விளையாடவில்லை என்றால் அவருக்கு இன்னும் காலம் இருக்கிறது என்று கூறும் மக்கள், மூத்த வீரர்கள் சொதப்பினால் ‘அவர்களின் காலம் முடிந்துவிட்டது’ என்று கூறிவிடுவார்கள்.

எனினும், திறமையும் உடற்தகுதியும் இருந்தால் வயதைக் கணக்கில் கொள்ளாமல் விளையாடலாம் என்றும், தற்போது இவர்கள் இருவரும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட முக்கியப் பங்கு வகிக்கிறார்கள் என்றும் கபில்தேவ் சுட்டிக்காட்டியுள்ளார்.