புனேவில் கேதன் அகர்வால் என்ற தொழிலதிபர், அவரது வருங்கால மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனால் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள், ஹரியானா மாநிலம் குருகிராமில் அதே போன்றதொரு கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. மானேசர் பகுதியைச் சேர்ந்த அங்கித் (25) என்ற இளைஞருக்கும், 22 வயது இளம்பெண் ஒருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்து வெறும் மூன்று மாதங்களே ஆன நிலையில், கடந்த மே 21 ஆம் தேதி முதல் அந்த புதுப்பெண்ணைக் காணவில்லை.

இதனால் பதறிப்போன அவரது தாய், பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனது மகள் காணாமல் போனதற்கு மருமகன் அங்கித் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம் என அவர் சந்தேகம் எழுப்பினார். இதன்பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில், மே 22 ஆம் தேதி மானேசரில் உள்ள ஒரு அறைக்குள் அந்த இளம்பெண் துப்பாக்கியால் சுடப்பட்டு, பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், கணவன் அங்கித்தும் அவனது கள்ளக்காதலி ரஜினி தேவியும் (38) சேர்ந்து இந்த கொலையைச் செய்தது வெளிச்சத்திற்கு வந்தது. அந்தப் பகுதியில் புகையிலைக் கடை நடத்தி வந்த அங்கித்துக்கும், பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வந்த ரஜினிக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்துள்ளது. திருமணத்திற்கு பிறகும் தங்களது கள்ள உறவை தொடர நினைத்த இவர்கள், மனைவியைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்பே உத்தரப் பிரதேசத்திற்குச் சென்று ரகசியமாகத் துப்பாக்கியை வாங்கி வந்துள்ளனர். சம்பவத்தன்று, ரஜினியின் வாடகை அறைக்கு மனைவியை அழைத்துச் சென்ற அங்கித், கள்ளக்காதலியுடன் சேர்ந்து அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். கொலைக்குப் பின் நேபாளத்திற்குத் தப்பி ஓடிய இந்தக் கள்ளக்காதல் ஜோடி, ஒரு மாதத்திற்குப் பிறகு இந்தியா திரும்பி நிலையில் போலீஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டது. தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி இருவரும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.