இலங்கையின் பெருவளை  பகுதியில் உள்ள பள்ளி ஒன்றின் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிரிக்கெட் திருவிழாவின் போது, பேட்டிங் செய்துகொண்டிருந்த 46 வயது நபர் ஒருவர் திடீரென மைதானத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேரில் பார்த்தவர்களின் கூற்றுப்படி, அவர் பேட்டிங் கிரீஸில் நின்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென அப்படியே பிட்ச்சில் சரிந்து விழுந்துள்ளார்.

இந்த கிரிக்கெட் போட்டி அப்போது இணையதளத்தில் நேரலை செய்யப்பட்டு வந்ததால், இந்த காட்சி அப்படியே வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில், அவர் உயிரிழப்பதற்கு முன்பாக 3 பந்துகளை எதிர்கொண்டு, ஆட்டமிழக்காமல் 6 ரன்கள் எடுத்திருந்தது தெரியவந்துள்ளது.

மைதானத்திலேயே அவர் மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். முதற்கட்ட தகவல்களின்படி, அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாகவே இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இருப்பினும், அவரது மரணத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த போதே சக வீரர் திடீரென உயிரிழந்த இந்த  சம்பவம், அங்குள்ள வீரர்கள், நடுவர்கள் மற்றும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, அதிர்ச்சியடைந்த போட்டி ஏற்பாட்டாளர்கள் அந்த கிரிக்கெட் தொடரின் எஞ்சிய அனைத்து போட்டிகளையும் பாதியிலேயே ரத்து செய்து உத்தரவிட்டனர்.