திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ஓடும் அரசு பேருந்தில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழனியிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற அந்தப் பேருந்தில் நள்ளிரவு சுமார் 1 மணி அளவில், ரெட்டியார்சத்திரம் அருகே வந்தபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேலும் பேருந்தின் பின்பக்கப் படிக்கட்டு அருகே இருந்த கம்பியில், தனது வேட்டியாலேயே அந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை கண்டக்டர் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு, போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெட்டியார்சத்திரம் போலீசார், வாலிபரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்த நபர் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் மற்றும் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சக பயணிகளிடையே இந்தச் சம்பவம் பெரும் சோகத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.