தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில், சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள திமுகவின் உதயநிதி ஸ்டாலின் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
சட்டப்பேரவைக்குள் முதல்வர் விஜயும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் நுழைந்ததைத் தொடர்ந்து, தற்போதைய சட்டமன்றம் மிகுந்த சுவாரசியமானதாக மாறியுள்ளதாக அரசியல் விமர்சகர்களும், சமூக வலைதளப் பயனாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சட்டப்பேரவையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜயுடனான தங்களின் கல்லூரி கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
இன்றைக்கு முதல்வராக இருக்கக்கூடியவரும் (விஜய்), நானும் ஒரே கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள். ஒரே கல்லூரியில் படித்திருந்தாலும், அரசாங்கத்தை நடத்துவதில் திமுகதான் சீனியர் பேட்ச் என்று அவர் கலகலப்பாகவும் அதே சமயம் அரசியல் சாதுரியத்துடனும் பேசினார். இவர்களது இந்த ஆரோக்கியமான அரசியல் விவாதம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதற்கிடையே, விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பாக, உதயநிதி ஸ்டாலினின் அரசியல் செயல்பாடுகள் குறித்து விஜயும், விஜய் குறித்து உதயநிதியும் பேசிய பழைய பேட்டி வீடியோக்கள் தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
முன்னதாக ‘மாமன்னன்’ திரைப்பட பேட்டியின் போது உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “நான் சட்டமன்ற உறுப்பினரான பின்பு, எங்கள் வீட்டில் நடந்த குடும்ப விழாவில் விஜய் அண்ணன் கலந்து கொண்டார். அப்போது தனியாக 10 நிமிடங்கள் பேசினோம். ‘பயங்கரமா பண்றப்பா…’ என எனது அரசியல் பணிகளை அவர் மிகவும் பாராட்டினார். நானும் ‘சரிண்ணே, தேங்க்ஸ் அண்ணே’ என்றேன். அப்போது நாங்கள் சினிமா குறித்தோ, அரசியல் குறித்தோ பெரிதாக எதுவும் பேசவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல், விஜய் மாணவர்களுக்கு கல்வி விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்திய போது பேசியிருந்த உதயநிதி, “விஜய் மாணவர்களைப் பாராட்டி ஊக்கம் அளித்தது நல்ல முயற்சி. தொடர்ந்து அவர் அதைச் செய்ய வேண்டும். விஜய் அரசியலுக்கு வந்தால், தன் கட்சியின் கொள்கைகளைச் சொல்ல வேண்டும். எங்கள் கட்சிக்கு எனத் தனி கொள்கைகள் உண்டு. இருவரின் கொள்கையும் ஒன்றானால் இணைந்து பணியாற்றலாம்” என்று கூறியிருந்தார்.
தற்போது ஒருவர் முதல்வராகவும், மற்றொருவர் எதிர்க்கட்சித் தலைவராகவும் நேருக்கு நேர் சட்டப்பேரவையில் சந்தித்துக் கொண்டிருப்பது, தமிழக அரசியலில் ஒரு புதிய மற்றும் சுவாரசியமான அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளதாகப் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
