நெல்லை பாளையங்கோட்டையில் 5 வயது பெண் குழந்தையின் கண்முன்னே, வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கூறி  அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

நெல்லை பாளையங்கோட்டை தியாகராஜ நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்து மாலை (36). இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், திடீரென வீட்டிற்குள் புகுந்து முத்து மாலையை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

தாயை கண்முன்னே கொடூரமாகத் தாக்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது 5 வயது பெண் குழந்தை அலறியுள்ளது. குழந்தையின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அண்டை வீட்டார், ரத்த வெள்ளத்தில் கிடந்த முத்து மாலையைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும் குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில் முத்துமாலை கொல்லப்பட்ட வழக்கில் தற்போது அவரது உறவினரான இசக்கி பாண்டி என்ற 45 வயது நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.