தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் மற்றும் 9 அமைச்சர்களுக்கான இலாகாக்கள் நேற்று அதிகாரப்பூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 164 (1A)-ன்படி, ஒரு மாநிலத்தின் அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை, அந்த மாநிலத்தின் மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதத்தைத் தாண்டக்கூடாது. அந்த வகையில், 234 இடங்களைக் கொண்ட தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் உட்பட அதிகபட்சமாக 35 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்க முடியும்.

தற்போது முதலமைச்சர் விஜய் உட்பட 10 பேர் மட்டுமே பதவியேற்றுள்ளதால், அமைச்சரவையில் இன்னும் 25 இடங்கள் காலியாக உள்ளன. இதில் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு 2 அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரம், கம்யூனிஸ்ட் கட்சிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் புதிய அமைச்சரவையில் தாங்கள் இடம் பெறப்போவதில்லை என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளனர்.

நேற்று வெளியிடப்பட்ட இலாகா ஒதுக்கீட்டின்படி முக்கிய அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள துறைகள் வருமாறு,

முதலமைச்சர் விஜய் – காவல்துறை, பெண்கள் நலன் மற்றும் இதர முக்கிய துறைகள்.

ஆனந்த் – ஊரக வளர்ச்சித்துறை.

ஆதவ் அர்ஜுனா – பொதுப்பணித்துறை.

அருண்ராஜ் – சுகாதாரத்துறை.

செங்கோட்டையன் – நிதித்துறை.

முக்கிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டாலும், இன்னும் பல முக்கிய துறைகள் யாருக்கும் ஒதுக்கப்படாமல் உள்ளன. வனம், வேளாண்மை, வருவாய், வீட்டுவசதி, கூட்டுறவு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME), சமூக நலன், மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், சுற்றுலா, கைத்தறி, வணிகவரி, போக்குவரத்து, இந்து சமய அறநிலையத்துறை, உயர் கல்வி, தகவல் தொழில்நுட்பம், சிறுபான்மையினர் நலன், தொழிலாளர் நலன், ஆதிதிராவிடர் நலன் மற்றும் மனிதவள மேலாண்மை ஆகிய 21 துறைகள் இன்னும் காலியாகவே வைக்கப்பட்டுள்ளன.

இந்தத் துறைகள் அனைத்தும் இன்னும் ஒருசில நாட்களில் புதிய அமைச்சரவை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட உள்ளன. இந்த அடுத்தகட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளதாக த.வெ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அதிமுகவில் பிரிந்து சென்ற ஒரு சிலர் தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சரவையில் இடம்பெற இருப்பதாக கூறப்படும் நிலையில் அதற்கு எதிர்ப்புகள் கிளம்பி வருவதால் இதில் முதலமைச்சர் விஜயின் முடிவு என்னவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.