விமானத்தில் பயணம் செய்பவர்களுக்குத் தங்களது உடைமைகள் (Luggage) பத்திரமாக வந்து சேருமா என்பதே ஒரு பெரிய கவலையாக இருக்கும். பல நேரங்களில் சூட்கேஸ் உடைந்தோ அல்லது சக்கரங்கள் கழன்றோ வரும்போது, “ஹேண்ட்லிங் எர்ரர்” என்று கூறி ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தப்பித்துக் கொள்ளும். ஆனால், சிகாகோ ஓ’ஹேர் விமான நிலையத்தின் ‘பேகேஜ் ரூம்’ எனச் சொல்லப்படும் இடத்திலிருந்து கசிந்துள்ள ஒரு வீடியோ, ஒட்டுமொத்தப் பயணிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதில் ஊழியர்கள் பயணிகளின் சூட்கேஸ்களை மிக மோசமாகத் தூக்கி எறிவதும், உதைப்பதுமான காட்சிகள் பதிவாகியுள்ளன.

​இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “நாங்கள் இவ்வளவு பணம் கொடுத்து லக்கேஜ் புக் செய்வது, இப்படித் தூக்கி எறிவதைப் பார்ப்பதற்கா?” எனப் பயணிகள் கொந்தளித்து வருகின்றனர். பல விலையுயர்ந்த சூட்கேஸ்கள் மற்றும் அதில் உள்ள முக்கியப் பொருட்கள் எப்படிச் சேதமடைகின்றன என்பதற்கு இந்த ‘லீக் வீடியோ’ ஒரு நேரடி சாட்சியாக அமைந்துள்ளது. “ப்ராக்ஜைல்” (Fragile) என்று ஒட்டப்பட்டிருக்கும் பைகள் இன்னும் மோசமாகக் கையாளப்படுவதாக முன்னாள் ஊழியர்களே கருத்து தெரிவிப்பது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தாலும், பயணிகளின் உடைமைகளுக்குக் குறைந்தபட்ச மரியாதைகூடக் கிடைப்பதில்லை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.