தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். சமீபகாலமாக திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் விஜய், அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அதிமுகவை ‘ஊழல் சக்தி’ என்று சாடினார். இது அதிமுக வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், விஜயை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

விஜய் எப்போதும் பணக்காரர்கள் வீட்டு கல்யாணங்களுக்கு மட்டுமே செல்கிறார். எப்போதாவது ஏழை எளிய தொண்டர்களின் வீட்டு விசேஷங்களுக்கு அவர் சென்றதுண்டா?கோடீஸ்வரர்களுடனான தொடர்பை மட்டுமே அவர் விரும்புகிறார்,” என்று ஜெயகுமார் குற்றம் சாட்டினார். விஜய்யின் குடும்ப உறவுகள் குறித்துப் பேசிய ஜெயகுமார், “திரையுலகில் தான் வளர்வதற்கு அடித்தளமாக இருந்தவர் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். விஜய் இதுவரை 7 புதிய தயாரிப்பாளர்களை உருவாக்கியதாகப் பெருமைப்படுகிறார். ஆனால், தன்னை வளர்த்துவிட்ட தந்தையை ஏன் மீண்டும் ஒரு தயாரிப்பாளர் ஆக்கவில்லை? அவருக்கு அத்தகைய மனநிலைதான் இருக்கிறது,” எனச் சாடினார்.

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரால் வளர்க்கப்பட்ட அதிமுகவை ஊழல் கட்சி என்று விமர்சிக்க விஜய்க்கு எந்தத் தகுதியும் இல்லை என்றும், அரசியல் முதிர்ச்சியின்மையால் அவர் இவ்வாறு பேசுவதாகவும் அதிமுகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் விஜய்யின் அரசியல் வருகை தமிழக அரசியலில் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ள நிலையில், அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையேயான இந்த வார்த்தைப் போர் தற்போது தீவிரமடைந்துள்ளது.