புரட்சி தமிழகம் கட்சி தலைவராக உள்ள ஏர்போர்ட் மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வந்தார்.
இந்த நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகம் அருகே அவர் நின்றுக்கொண்டிருந்தபோது, விசிக ஆதரவாளர்கள் அவரை சூழ்ந்துகொண்டு தாக்கினர். அப்போது அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் தடுக்க முயன்றும் தாக்குதல் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஏர்போர்ட் மூர்த்தியும் பதிலடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏர்போர்ட் மூர்த்தி, “திருமாவளவனின் பட்டியலின சமூக விரோத கருத்துகளை தொடர்ந்து நான் அம்பலப்படுத்தி வருகிறேன். இதனைக் காரணமாக வைத்து அவர் எனது உயிருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து நான் இரு முறை போலீசில் புகார் அளித்தேன்.
ஆனால் போலீசார், ‘நீங்கள்தான் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டனர்” எனக் குற்றஞ்சாட்டினார். மேலும், “திருமாவளவன் நள்ளிரவு 12 மணிக்கு லுங்கி கட்டிக்கொண்டு பெசன்ட் நகருக்கு தனியாக வருவதை எனக்குத் தெரியும். என் வீடு அங்குதான் இருக்கிறது. எனவே அவர் தனது செயல்களை கட்டுப்படுத்த வேண்டும்” என எச்சரிக்கை அளித்தார்.
இந்த பரபரப்புக்குப் பிறகு, விசிக சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஏர்போர்ட் மூர்த்தி மீது புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், “நமது கட்சியினரை ஏர்போர்ட் மூர்த்தி பாக்கெட் கத்தியால் தாக்கியுள்ளார். இதில் 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகாரைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில், டிஜிபி அலுவலக வாசலில் விசிக நிர்வாகிகளை கத்தியை வைத்து தாக்கியதாக எழுந்த புகாரின் பேரில், ஏர்போர்ட் மூர்த்தியை சென்னை மெரினா போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், ஆபாசமாக பேசியது, கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த வழக்கை தொடர்ந்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
