இன்ஸ்டாகிராமில் ஒரு இளைஞர் வெளியிட்ட வீடியோ, வெளிநாடுகளில் இந்தியர்கள் மீது வெறுப்பு ஏற்படுவதற்கான காரணங்களைப் பற்றி விவாதித்து, வைரலாகி வருகிறது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் சிலர், இங்கு பின்பற்றும் பழக்கங்களை அங்கும் தொடர்கின்றனர், ஆனால் அவை அங்கு ஏற்றுக்கொள்ளப்படுவது கடினம். உதாரணமாக, இங்கிலாந்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்போது, விநாயகர் சிலையை ஏரியில் கரைத்தது பொது இடத்தில் தவறு எனக் கருதப்பட்டது. வீட்டில் கொண்டாடி முடித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதேபோல், இந்தியாவில் செய்வதைப் போல தேரோட்டம், உரத்த மேளம், இசைக்கருவிகள் ஆகியவை போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்து, உள்ளூர் மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகின்றன. மேலும், படிக்கச் சென்ற சிலர் வெளிநாடுகளில் திருட்டு, பிச்சை எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது இந்தியர்களுக்கு கெட்ட பெயரைப் பெற்றுத் தருகிறது. திரையரங்குகளில், இந்தியாவில் குப்பைகளை வீசுவது போல, வெளிநாட்டு திரையரங்குகளிலும் காகிதங்களை வீசி அசுத்தப்படுத்துவது எரிச்சலை உண்டாக்குகிறது.
அது மட்டுமல்லாமல், இந்தியாவில் நடிகர்களுக்கு பால் அபிஷேகம் செய்வதைப் போல, வெளிநாடுகளிலும் பால் அபிஷேகம் செய்வது உள்ளூர் மக்களிடையே இந்தியர்கள் மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இதை படித்தவர்கள் செய்வது தான் ஏற்று கொள்ளமுடியாத உண்மை. இத்தகைய செயல்கள், இந்தியர்களை வெளிநாட்டவர்கள் வெறுப்பதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், இது உண்மையென கருத்து தெரிவித்து, இந்தியர்கள் வெளிநாடுகளில் உள்ளூர் கலாச்சாரத்தை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
