இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் மீண்டும் இந்தியாவுக்கு திரும்ப விரும்பாததற்கு ஐந்து முக்கிய காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. முதல் காரணம், மனநிலை மாறுபாடு. வெளிநாட்டில் இருக்கும்போது இந்தியாவுக்கு செல்ல வேண்டும் என்று தோன்றினாலும், இந்தியாவுக்கு வந்த பிறகு 10-15 நாட்களில் மீண்டும் வெளிநாட்டுக்கு திரும்ப வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. இந்த இரு மனநிலைகளால், பலர் வெளிநாட்டில் தங்குவதையே சிறந்ததாக கருதுகின்றனர்.
இரண்டாவது, சமூக அந்தஸ்து. வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியர்களின் குடும்பத்தினர், தங்கள் பிள்ளைகள் வெளிநாட்டில் இருப்பதை பெருமையாக கூறுவர். ஆனால், இந்தியாவுக்கு திரும்பினால் இந்த அந்தஸ்து குறையும் என்ற எண்ணத்தில், பலர் திரும்பி வருவதை தவிர்க்கின்றனர். மூன்றாவது, வருமானம். வெளிநாட்டில் கிடைக்கும் அதிக ஊதியமும், பண மதிப்பும் இந்தியாவில் கிடைப்பது கடினம் என்பதால், சிலர் திரும்ப வருவதை தவிர்க்கின்றனர். நான்காவது, கலாச்சார வேறுபாடு. வெளிநாட்டில் வாழ்பவர்கள் அங்கு பழகிய கலாச்சாரத்துக்கு ஏற்ப வாழ்ந்து பழகிவிடுகின்றனர். இந்தியாவுக்கு திரும்பும்போது, இங்குள்ள சூழல் மற்றும் கலாச்சாரத்தை ஏற்க கடினமாக உள்ளது, இதனால் மீண்டும் வெளிநாட்டுக்கு செல்ல விரும்புகின்றனர்.
ஐந்தாவது, பயம். இந்தியாவுக்கு திரும்பினால், நல்ல வேலை மற்றும் வருமானம் கிடைக்குமா என்ற அச்சம் உள்ளது. இதனால், வெளிநாட்டில் உள்ள நல்ல வேலையை விடுவதற்கு பயந்து, அங்கேயே தங்க முடிவு செய்கின்றனர். இந்த ஐந்து காரணங்கள் பலரை இந்தியாவுக்கு திரும்ப வராமல் தடுப்பதாக இந்த வீடியோ விளக்குகிறது, மேலும் இது உண்மை என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
