திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது, பாஜக கூட்டணியை ஏற்று கொள்ளாவிடில் சொந்த கட்சியில் தலைமைக்கே சிக்கல் வரும் என்று எடப்பாடி பழனிச்சாமி பயப்படுகிறார். அதனால் கூட்டணியை ஏற்றுக்கொண்டு விட்டார்.
அவருக்கு வேறு வழி இல்லை. பாஜக தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற நினைக்கிறது. அனைத்து அச்சுறுத்தலையும் செய்து அதிமுகவை அடக்கி விட்டது என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியுள்ளார்.
இந்த நிலையில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, அதிமுகவை பாஜக மிரட்டி பணிய வைத்து இருக்கிறது என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறுகிறார். எங்களுக்கு எந்த மிரட்டலும் இல்லை. மிகுந்த மகிழ்ச்சியோடு உருவானது தான் இந்த கூட்டணி.
அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் என பாஜக நினைக்கிறது. தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைக்கும் கட்சி பாஜக. பச்சோந்தி போல அடிக்கடி கொள்கை, கோட்பாடு இல்லாமல் கூட்டணி மாறுவது திமுக தான். திமுக ஆட்சியை வெளியேற்ற வேண்டும் என்ற கருத்துடைய அனைத்து கட்சிகளும் எங்கள் கூட்டணியில் இணையும் என கூறியுள்ளார்.
