மத்தியப் பிரதேச மாநிலத்தில் 11 வயதான ஆசிம் ரஸா என்ற பள்ளி மாணவன் வழக்கம் போல் வகுப்புகள் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது, உடைந்த சாலைத் தடுப்பைக் கடக்க முயன்ற அந்த அப்பாவிச் சிறுவன் மீது அதிவேகமாக வந்த லாரி ஒன்று மோதியதில், அவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
மதிய உணவு சமைத்து வைத்துக்கொண்டு, மகன் பள்ளி முடிந்து பசியோடு வீடு திரும்புவான் என எதிர்பார்த்துக் காத்திருந்த தாய்க்கு, இந்தச் செய்தி பேரதிர்ச்சியாக அமைந்தது. விபத்து நடந்த பகுதியின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் கட்டுக்கடங்காத போக்குவரத்துக்கு இடையே, கண் இமைக்கும் நேரத்தில் லாரி சிறுவன் மீது ஏறிச் சென்ற நெஞ்சை உலுக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இந்தக் கோர விபத்து ஜபல்பூரின் மோசமான போக்குவரத்து நிர்வாகத்தையும், அதிகாரிகளின் அலட்சியத்தையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அப்பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் நீண்ட காலமாகப் பழுதடைந்திருந்ததாகவும், சாலையோரத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து விபத்து அச்சுறுத்தல் நிலவுவதாகவும் கோபமடைந்த உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சிறுவனின் மரணத்திற்குப் பிறகு, அப்பகுதி மக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கடுமையாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு வாரத்திற்குள் உடைந்த தடுப்புச் சுவர்களை மூடவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் தவறினால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாகத் துரிதமாகச் செயல்பட்ட காவல்துறை, பழுதடைந்த சிக்னலை அவசர அவசரமாகச் சரிசெய்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோஹல்பூர் காவல்துறையினர், சிறுவனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரியைப் பறிமுதல் செய்த போலீசார், அதன் ஓட்டுநரைக் கைது செய்து கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
