கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கீழ்வாய்ப்பூர் பகுதியைச் சேர்ந்த லதாகுமாரி என்பவரின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் சுமையா என்ற பெண், அக்டோபர் 9 அன்று லதாகுமாரியின் வீட்டிற்குள் புகுந்து தங்க நகைகளைத் திருட முயன்றார். இதை லதாகுமாரி தடுக்க முயலவே, சுமையா அவரைத் தாக்கி, தீ வைத்து எரிக்க முயற்சித்தார். இதில் லதாகுமாரி பலத்த தீக்காயங்களுடன் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சுமையாவை காவல்துறை கைது செய்து, திருட்டு மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டில் சிறையில் அடைத்தது.

சிகிச்சையில் இருந்த லதாகுமாரி, கடந்த வெள்ளி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், சுமையா மீதான வழக்கு கொலை வழக்காக மாறியுள்ளது. சுமையா காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில், பங்குச் சந்தையில் ஏற்பட்ட பெரும் நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காகவே திருட்டுத் திட்டமிட்டதாகக் கூறினார். காவல்துறை அவரிடமிருந்து திருடப்பட்ட தங்கச் சங்கிலியை மீட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பாதுகாப்பு குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.