கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ இடையூறாக இருந்த கோவில் பூசாரி கணவனைக் கொலை செய்த மனைவி உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது மண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த சித்தலிங்கப்பா (35) என்பவர் கடந்த மார்ச் 6-ஆம் தேதி முதல் காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டது. மார்ச் 7-ஆம் தேதி கால்வாய் ஒன்றில் அவரது சடலம் மீட்கப்பட்ட நிலையில், போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் அவரது மனைவி ஷாலினி (32) தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து இந்தக் கொலையைச் செய்தது அம்பலமாகியுள்ளது.
சாரி சித்தலிங்கப்பாவின் மனைவி ஷாலினிக்கும், அவர்களது அண்டை வீட்டில் வசிக்கும் லாரி ஓட்டுநர் ஹரீஷ் (33) என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகக் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. ஓராண்டுக்கு முன்பு இந்த விஷயம் சித்தலிங்கப்பாவிற்குத் தெரியவரவே, தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஷாலினி, தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டார்.
அதன்படி கடந்த மார்ச் 6-ஆம் தேதி சித்தலிங்கப்பா கோவிலுக்குச் சென்றபோது, அவர் அன்று உபவாசம் இருந்ததால் உடல் வலிமை குன்றி இருப்பார் என்பதை ஷாலினி தனது காதலனுக்குத் தெரிவித்துள்ளார். இதைப் பயன்படுத்திக் கொண்ட ஹரீஷ் மற்றும் அவரது நண்பர்கள் சந்தோஷ் குமார், கணேஷ் ஆகியோர், சித்தலிங்கப்பாவை வழிமறித்துத் தலையில் பலமாகத் தாக்கி கொலை செய்தனர். பின்னர் கொலையை விபத்து போலச் சித்தரிக்க, அவரது உடல் மற்றும் இருசக்கர வாகனத்தைக் கால்வாயில் வீசிச் சென்றனர்.
போலீஸாரின் சந்தேகத்தைத் திசைதிருப்ப, கணவனின் இறுதிச் சடங்கில் ஷாலினி மற்றும் கொலையாளிகள் அனைவரும் கலந்து கொண்டு அழுது நாடகமாடியுள்ளனர். ஆனால், சம்பவ இடத்தில் கிடைத்த ரத்தக்கறை மற்றும் செல்போன் அழைப்புகளைக் கொண்டு போலீஸார் நடத்திய விசாரணையில் உண்மை வெளிவந்தது. மேலும் இதையடுத்து ஷாலினி, ஹரீஷ் மற்றும் கொலையில் உதவிய இருவர் என மொத்தம் 4 பேரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலுக்காகக் கணவனையே கொன்ற மனைவியின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
