பெட்ரோல் நிலையத்தில் பைக் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீயை, ஊழியர் ஒருவர் தனது சமயோசித புத்தியால் அணைத்து பெரும் விபத்தைத் தடுத்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சமூக வலைதளங்களில் பரவி வரும் சிசிடிவி (CCTV) காட்சியில், நபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக பைக்கின் டேங்க் பகுதியில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டி, பைக்கை அங்கேயே போட்டுவிட்டு அலறியடித்துக்கொண்டு ஓடினார்.

 

பெட்ரோல் நிலையம் போன்ற வெடிபொருட்கள் நிறைந்த இடத்தில் ஒரு சிறிய தீப்பொறி கூட மிகப்பெரிய வெடிப்பிற்கும், உயிர்ச் சேதத்திற்கும் வழிவகுக்கும். இக்கட்டான இந்தச் சூழலில், அங்கிருந்த பெட்ரோல் பங்க் ஊழியர் எவ்வித பதற்றமும் இன்றி செயல்பட்டார். தீயைக் கண்டவுடன் ஓடாமல், அங்கிருந்த தீயணைப்பு கருவியை  எடுத்து மின்னல் வேகத்தில் தீயை அணைத்தார். இதனால் சில நொடிகளில் தீ கட்டுப்படுத்தப்பட்டு, பெட்ரோல் நிலையத்தில் நேரவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ ‘எக்ஸ்’ (X) தளத்தில் பகிரப்பட்டு, இதுவரை 9 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது. நிதானமாகவும், தைரியமாகவும் செயல்பட்ட அந்த ஊழியருக்குப் பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். “நிதானமாகச் செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது”, “சீருடை அணியாத நிஜ நாயகன்” எனப் பலரும் அந்த ஊழியரை பாராட்டி கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். ஒரு பேரிடர் நிகழவிருந்த சூழலில், தனி மனிதரின் சமயோசித புத்தி எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி.