மகாராஷ்டிராவில் நடைபெற்று வரும் பொதுத்தேர்வு விடைத்தாள்களை, ஆறாம் வகுப்பு மாணவிகளைக் கொண்டு ஆசிரியர் ஒருவர் திருத்தச் செய்த அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கல்வித்துறையின் இந்த அலட்சியப்போக்கு பெற்றோர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டம், பால்டன் தாலுகாவில் உள்ள விதானி பகுதியில் உத்தரேஷ்வர் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மராத்தி ஆசிரியராகப் பணியாற்றும் வைபவ் ஷெண்டே என்பவர், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை (மராத்தி பாடம்) மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

வழக்கமாக மிகுந்த ரகசியத்தன்மையுடனும், பொறுப்புடனும் செய்யப்பட வேண்டிய இப்பணியை, அந்த ஆசிரியர் அலட்சியமாக கையாண்டுள்ளார். அவர் தனது பள்ளியில் பயிலும் ஆறாம் வகுப்பு மாணவிகளை அருகில் அமரவைத்து, பத்தாம் வகுப்பு விடைத்தாள்களைச் சரிபார்க்கச் சொல்லிக் கொடுத்துள்ளார். இந்த அதிர்ச்சிகரமான காட்சிகள் பள்ளியின் சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது மாணவர்களின் உயர் கல்விக்கான மிக முக்கியமான கட்டமாகும். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த விடைத்தாள்களை ஆறாம் வகுப்பு சிறுமிகளைக் கொண்டு மதிப்பீடு செய்தது, ஒட்டுமொத்த தேர்வு வாரியத்தின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

மகாராஷ்டிரா மாநில வாரியத் தேர்வுகள் (SSC & HSC) தற்போது நடைபெற்று வரும் நிலையில், ஏற்கெனவே கணிதப் பாட வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பே டெலிகிராம் செயலி வாயிலாகக் கசிந்து சர்ச்சையை ஏற்படுத்தியது. வினாத்தாள் கசிவு ஒருபுறம் இருக்க, தற்போது விடைத்தாள் மதிப்பீட்டிலும் இத்தகைய குளறுபடிகள் அரங்கேறியுள்ளது மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தச் சம்பவம் குறித்து உள்ளூர் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட ஆசிரியர் வைபவ் ஷெண்டே மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.