ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா மீது நடத்தப்பட்ட கொலை முயற்சித் தாக்குதல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புப் படையினரின் துரித நடவடிக்கையால் அவர் காயமின்றி உயிர் தப்பினார். ஜம்முவில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பரூக் அப்துல்லா கலந்துகொண்டார். அப்போது, கூட்டத்தில் மறைந்திருந்த நபர் ஒருவர், திடீரென அப்துல்லாவை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றார்.

தாக்குதல் நடத்திய நபர், பரூக் அப்துல்லாவிற்கு மிக அருகிலேயே நின்றுகொண்டிருந்தார். அவர் தனது தோள்பட்டைக்கு இணையாகத் துப்பாக்கியை உயர்த்திச் சுட முயன்றபோது, அங்கிருந்த தேசிய பாதுகாப்புப் படை (NSG) கமாண்டோக்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு அவரை கீழே தள்ளி வீழ்த்தினர். இதனால் துப்பாக்கிக் குண்டு இலக்கைத் தவறியது. இதையடுத்து, பரூக் அப்துல்லா பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.துப்பாக்கியுடன் பிடிபட்ட நபரை பாதுகாப்புப் படையினர் உடனடியாகக் கைது செய்தனர். விசாரணையில் அவர் ஜம்முவின் புராணாஸ் மண்டி பகுதியைச் சேர்ந்த கமல் சிங் ஜம்வால் (65) என்பது தெரியவந்தது. பிடிபட்ட அவரை அங்கிருந்த பொதுமக்கள் ஆத்திரத்தில் தாக்கிய காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன.

கைது செய்யப்பட்ட கமல் சிங்கிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதாவது கடந்த 20 வருடங்களாக அவரை கொலை செய்ய தான் முயற்சி செய்ததாகவும் அதற்கு தற்போது தான் வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் கூறினார். மேலும் அவர் இன்று உயிர் பிழைத்தது அதிர்ஷ்டம் எனவும் தாக்குதலுக்கு பயன்படுத்தியது தன்னுடைய ஆயுதம் தான் என்றும் அவர் கூறினார். அதே நேரத்தில் தன்னுடைய செயலுக்காக அவர் சிறிதும் வருத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது