ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா மீது நடத்தப்பட்ட கொலை முயற்சித் தாக்குதல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புப் படையினரின் துரித நடவடிக்கையால் அவர் காயமின்றி உயிர் தப்பினார். ஜம்முவில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பரூக் அப்துல்லா கலந்துகொண்டார். அப்போது, கூட்டத்தில் மறைந்திருந்த நபர் ஒருவர், திடீரென அப்துல்லாவை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றார்.
தாக்குதல் நடத்திய நபர், பரூக் அப்துல்லாவிற்கு மிக அருகிலேயே நின்றுகொண்டிருந்தார். அவர் தனது தோள்பட்டைக்கு இணையாகத் துப்பாக்கியை உயர்த்திச் சுட முயன்றபோது, அங்கிருந்த தேசிய பாதுகாப்புப் படை (NSG) கமாண்டோக்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு அவரை கீழே தள்ளி வீழ்த்தினர். இதனால் துப்பாக்கிக் குண்டு இலக்கைத் தவறியது. இதையடுத்து, பரூக் அப்துல்லா பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.
बड़ी खबर-
जम्मू में पूर्व मुखमंत्री फारूक अब्दुल्लाह पर एक शादी समारोह में फायरिंग । गोली चली। बाल बाल बचे। डिप्टी सीएम सुरेंद्र चौधरी भी साथ थे।
हमलावर कमल सिंह जामवाल गिरफ्तार! pic.twitter.com/1qkBWGwjho— Narendra Nath Mishra (@iamnarendranath) March 11, 2026
துப்பாக்கியுடன் பிடிபட்ட நபரை பாதுகாப்புப் படையினர் உடனடியாகக் கைது செய்தனர். விசாரணையில் அவர் ஜம்முவின் புராணாஸ் மண்டி பகுதியைச் சேர்ந்த கமல் சிங் ஜம்வால் (65) என்பது தெரியவந்தது. பிடிபட்ட அவரை அங்கிருந்த பொதுமக்கள் ஆத்திரத்தில் தாக்கிய காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட கமல் சிங்கிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் அதிர்ச்சிகரமான தகவலைத் தெரிவித்துள்ளார். “இந்த ஒரு தருணத்திற்காக கடந்த 20 ஆண்டுகளாகக் காத்திருந்தேன்” என்று கூறிய அவர், தனது செயலுக்காகச் சிறிதும் வருந்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்தக் கொலை முயற்சி தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இச்சம்பவம் குறித்து ஜம்மு-காஷ்மீர் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
