சுவீடனில் தனது மனைவியையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களுக்கு உடந்தையாக இருந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த இந்தச் சட்டவிரோதச் செயலை, பாதிக்கப்பட்ட அந்தப் பெண் அளித்த புகாரின் பேரிலேயே காவல்துறை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

இந்த விவகாரத்தில் சுமார் 120 ஆண்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகத் சந்தேகிக்கப்படும் நிலையில், அந்த நபர் தனது மனைவியின் சேவைகளை விற்று அதன் மூலம் நிதி ஆதாயம் பெற்றதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் சுவீடன் நாட்டுச் சட்டப்படி, பாலியல் சேவைகளை விற்பனை செய்வது குற்றமல்ல என்றாலும், அதை வாங்குவதும் மற்றும் இதுபோன்ற இடைத்தரகர் வேலைகளில் ஈடுபடுவதும் கடுமையான தண்டனைக்குரிய குற்றங்களாகும். தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள அந்த நபர், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார்.

மேலும் ஏற்கனவே வன்கொடுமை மற்றும் சட்டவிரோதக் கட்டாயப்படுத்துதல் போன்ற குற்றங்களுக்காகத் தண்டனை பெற்றவரான இவர் மீது, வருகின்ற மார்ச் மாதம் இறுதி விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதேசமயம், மனைவியின் சம்மதத்துடன் இது நடந்ததா அல்லது அவர் கட்டாயப்படுத்தப்பட்டாரா என்பது குறித்த ரகசிய விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.