பாட்னா ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டரில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கும் பயணி ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாட்னாவிலிருந்து ஆரா செல்வதற்கான சாதாரண ரயில் டிக்கெட்டின் விலை 15 ரூபாய் ஆகும்.

ஆனால், டிக்கெட் கவுண்டரில் இருந்த பெண் ஊழியர் அந்த டிக்கெட்டை 35 ரூபாய்க்கு விற்பனை செய்ததாக அந்த பயணி குற்றம் சாட்டியுள்ளார். இந்த விலைப் வித்தியாசம் குறித்து பயணி கேள்வி எழுப்பியபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அந்த பயணி இச்சம்பவத்தை வீடியோ எடுக்க முயன்றபோது, ஊழியர் கேமராவைப் பறிக்க முயன்றது நிலைமையை இன்னும் மோசமாக்கியது.

இந்த வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, ரயில்வே நிர்வாகம் இது குறித்து தனது கவனத்தைச் செலுத்தியுள்ளது. குறிப்பிட்ட அந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளப் பயனர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் க்யூஆர் கோடு மூலம் பணம் செலுத்துவதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு மற்றும் கூடுதல் கட்டணம் வசூலித்தது போன்ற புகார்கள் தொடர்பாக ரயில்வே விசாரணை நடத்தி வருகிறது. அரசு ஊழியர்களின் இத்தகைய நடவடிக்கைகள் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், ரயில்வே சேவைகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலுப்படுத்தியுள்ளது.