சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மல்லாகோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பள்ளியில் 35-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வரும் நிலையில், சமீபத்தில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
அதில், எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்வதும், ஒரு பெண் ஊழியர் அதனை மேற்பார்வையிடுவதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமரன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையின் போது, தற்காலிக பெண் ஊழியர் கழிவறையை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து உதவியதாகக் கூறப்பட்டது.
இருப்பினும், மாணவர்களை இத்தகைய பணிகளில் ஈடுபடுத்தியது விதிமீறல் என்பதால், இது குறித்து விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
