சிவகங்கை மாவட்டத்தில் சிறுவன் ஒருவன் மது போதையில் தள்ளாடி, மயங்கி விழுந்து ‘அம்மா.. அம்மா..’ என அழுது துடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ள அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் மூ.ராஜேஸ்வரி பிரியா, “சிறுவனின் இந்தக் காட்சியைக் பார்க்கும்போது மனம் கொந்தளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

​மேலும், “மது ஒழிப்பு குறித்து மேடைகளில் பேசிய கனிமொழி இப்போது எங்கே போனார்? அந்தச் சிறுவனுக்கு மது கொடுத்தது யார்?” என சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தைப் போதையில் தள்ளாடும் மாநிலமாக மாற்றியதே திமுகவின் சாதனை என்று குற்றம் சாட்டிய அவர், பிஞ்சு குழந்தைகள் கூட மதுவின் பிடியில் சிக்குவது வேதனையளிப்பதாகக் கூறினார். இந்தச் சம்பவம் தொடர்பாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.