தமிழக அரசியல் களம் தற்போது டெல்லியை நோக்கித் திரும்பியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்றிரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசியுள்ள நிலையில், இன்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அவசரமாக டெல்லிக்குப் பயணம் மேற்கொள்கின்றனர்.
வரவிருக்கும் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகள் மற்றும் எந்தெந்த இடங்கள் வேண்டும் என்பது குறித்து அமித்ஷாவுடன் இவர்கள் இருவரும் தனித்தனியாக ஆலோசனை நடத்த உள்ளனர். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தனது கோரிக்கைகளை முன்வைத்துள்ள நிலையில், இவர்களின் சந்திப்பு தொகுதிப் பங்கீட்டில் இறுதி முடிவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டெல்லியில் இன்று தமிழக அரசியல் தலைவர்களின் நடமாட்டம் அதிகரித்து, பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
