மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டம் ஷாஹாபூர் அருகே உள்ள பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்தில், இறந்தவருக்கு இறுதிச்சடங்கு செய்யக்கூட சரியான வசதி இல்லாதது தெரியவந்துள்ளது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஜெயாபாய் மகாது வாக் என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு இறுதிச்சடங்கு செய்வதற்காக தனியாக சுடுகாடு இல்லாததால், திறந்தவெளியில் சடங்கு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
அப்போது திடீரென மழை பெய்யத் தொடங்கியது. எரியூட்டும் இடம் மீது மழைநீர் விழுந்ததால், தீ அணையும் நிலை ஏற்பட்டது. இதனால் அங்கு இருந்த கிராம மக்கள் தார்ப்பாய்களை மேலே பிடித்துக்கொண்டு நின்றனர். மழையில் நனைந்தபடியே, எரியூட்டும் இடம் மீது தண்ணீர் விழாமல் பார்த்துக்கொண்டு இறுதிச்சடங்கை முடித்தனர்.
இந்த கிராமத்தில் சுமார் 100 பேர் வசித்து வருகின்றனர். இங்கு சுடுகாடு அமைக்க வேண்டும் என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகாரிகளிடம் கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருவதாக கூறப்படுகிறது. அதிகாரிகள் இடத்தைப் பார்வையிட்டும் இதுவரை சுடுகாடு அமைக்கப்படவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஒவ்வொரு முறையும் ஒருவர் இறந்தால், திறந்தவெளியிலேயே இறுதிச்சடங்கு செய்ய வேண்டிய நிலை இருப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மழைக்காலத்தில் இந்தப் பிரச்னை மேலும் மோசமாகிறது. மழை, சேறு உள்ளிட்ட காரணங்களால் இறுதிச்சடங்கு செய்வதே மிகவும் சிரமமாக இருப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர். எனவே, தங்களுக்கு விரைவில் சுடுகாடு அமைத்துத் தர வேண்டும் என்றும், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
