உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் நடந்த ஒரு கொடூர சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காதல் விவகாரத்தில் ஏற்பட்ட சிக்கலால், ஒரே பகுதியைச் சேர்ந்த இளைஞன், தனது நெருங்கிய நண்பனைத் தலை துண்டித்து கொன்ற பரபரப்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது சிவகத்ரா பகுதியில் வசிக்கும் ராஜேஷ் குமாரின் இளைய மகன் ரிஷிகேஷ் (வயது 18), வெள்ளிக்கிழமை இரவு விநாயகர் திருவிழாவுக்கு செல்வதாக கூறி வெளியே சென்றார். ஆனால், அவர் சனிக்கிழமை காலை 8 மணி வரை வீட்டிற்குத் திரும்பவில்லை. அவரது மொபைலும் அணைக்கப்பட்டிருந்தது. தீவிரமாக தேடிய பின்பும், எந்த தகவலும் கிடைக்காததால், அவரது மூத்த சகோதரர், சகேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இது குறித்து போலீசார் விசாரணையில், முக்கிய சந்தேக நபரான ஒருவரின் சகோதரியுடன் ரிஷிகேஷிற்கு காதல் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதே காரணமாக, அந்த இளைஞர் கோபத்தில் ரிஷிகேஷை கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. காவல்துறை வட்டாரங்களின்படி, குற்றம் சாட்டப்பட்ட இளைஞர், ரிஷிகேஷை COD அருகே உள்ள ககோரி காட்டுப் பகுதியில் அழைத்துச் சென்றார். அங்கு காத்திருந்த நண்பர்கள், ரிஷிகேஷின் தலையை துண்டித்து, உடலை துண்டுகளாக வெட்டி, சாக்குப் பையில் அடைத்து கங்கை ஆற்றில் வீசியதாகக் கூறப்படுகிறது.
ரிஷிகேஷின் சகோதரரின் புகாரின் பேரில், ஆறு பேரை உள்ளடக்கிய 14 பேருக்கு எதிராக காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதில், நான்கு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுக்கு உள்ளான மற்றவர்களையும் பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
குற்றம் நடந்த இடத்தில் போலீசார் தடயவியல் நிபுணர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர். சந்தேக நபர்களிடம் பென்சிடைன் சோதனையும் (இரத்த தடய பரிசோதனை) மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், அவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், மகாராஜ்பூர் பகுதியில், துண்டிக்கப்பட்ட தலை மற்றும் கைகளுடன் ஒரு உடலை கண்டுபிடித்தனர். இருப்பினும், அது ரிஷிகேஷின் உடலா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
விசாரணையின் போது, ரிஷிகேஷும், முக்கிய குற்றவாளியும், கடந்த காலத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கில் சிறையிலிருந்தவர்கள் என தெரியவந்துள்ளது. ரிஷிகேஷ் சமீபத்தில் தான் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இதே நேரத்தில் அவரது காதல் தொடர்பும், எதிர்பாராத முடிவுக்குத் தள்ளியுள்ளது. மேலும் கான்பூர் போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். மேலும், உடலை முழுமையாக மீட்டு, மருத்துவ பரிசோதனை மூலமும், DNA சோதனையிலும் அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
