பீகாரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில், காணொலி வாயிலாக பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ராஷ்ட்ரிய ஜனதா தளமும் (RJD) காங்கிரஸ் கட்சியும் நடத்திய நிகழ்ச்சியின் போது, தனது தாயைப் பற்றி அவமதிக்கப்பட்டதை கடுமையாக கண்டித்தார்.
இது பற்றி பிரதமர் மோடி தன் உரையில் கூறியதாவது: “ராஷ்ட்ரிய ஜனதா தள-காங்கிரஸ் கூட்டணியின் நிகழ்ச்சியின் போது, எனது தாயைப் பற்றி இழிவாக பேசியதைக் கேட்டேன். அரசியல் என்பது ஒருபுறம் இருக்கட்டும். என் தாயை அவமதித்தது எனது இதயத்தை மிகவும் காயப்படுத்தியது.
ஆனால் அதைவிட, பீகாரில் உள்ள பெண்கள் அந்த வார்த்தைகளை கேட்டபோது அவர்கள் உள்ளத்தில் ஏற்பட்ட வலி அதிகமானதாக இருக்கும். என் தாயை திட்டுவதை விட, அவமதித்ததுதான் பெரிய குற்றம்.
எனது தாயை இழிவுபடுத்தியவர்களை பீகார் மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். அரசியல் விரோதத்திற்காக பெண்களையே குறிவைக்கின்ற இந்த அணுகுமுறையை முடிக்க வேண்டும்.”
இது பற்றி மேலும் பிரதமர் மோடி கூறுகையில்,
“பீகாரில் RJD ஆட்சி கவிழ்வதற்குக் காரணம் பெண்கள்தான். அவர்களுடைய வாக்குகள் மாற்றத்தை ஏற்படுத்தின. அதனால், இப்போது அந்தக் கட்சி பெண்களிடையே பழிவாங்கும் நிலைக்கு வந்திருக்கிறது.
பெண்கள் பலவீனமானவர்கள் என்ற எண்ணமே இவர்கள் பேச்சுகளுக்கு அடிப்படை. ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதித்து வருகிறது. இது பெண்களுக்கெதிரான அரசியல் வெறுப்பாகவே பார்க்கப்படுகிறது.”
“என் தாயின் வாழ்க்கை அரசியலோடு சம்பந்தப்பட்டதல்ல. பழங்குடியின மகளான, நாட்டின் தலைவனான ஜனாதிபதியை இழிவுபடுத்துவது, ஒரு பெரிய தேசிய அவமானம். இது போன்ற பெண்கள் எதிர்ப்புத் தோழமை கட்சிகளின் அரசியலுக்கு பீகார் மக்கள் உரிய பதிலை கொடுப்பார்கள்,” என்று மோடி கூறினார்.
மேலும் கடந்த வாரம், பீகாரில் RJD-காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் நடைபெற்ற வாக்காளர் அதிகார யாத்திரை நிகழ்ச்சியில், ஒருவர் மைக்கை பயன்படுத்தி, பிரதமர் மோடியின் தாயைப் பற்றிய கருத்துக்களை வெளியிட்டதாக தகவல்கள் வெளியானது. அந்த நிகழ்ச்சிக்கு முக்கிய தலைவர்கள் யாரும் வராத சூழ்நிலையில், அந்த நபர் பேசியது சமூக ஊடகங்களில் பரவியது. இதற்கும் பதிலாகவே பிரதமர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
