உத்தரபிரதேச மாநிலம் அமேதியில், சாலையின் நடுவில் சோதனை மேற்கொண்ட காவல் ஆய்வாளர் ஒருவர் மூன்று வாலிபர்களை தனது காலால் எட்டி உதைத்து தாக்கியதுடன், அவர்களது தாயும், சகோதரியையும் அநாகரீகமாக திட்டிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. இது பெரும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.

இந்த சம்பவம் அமேதி மாவட்டத்தின் ஜாமோ காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோரியாபாத் பகுதியில் உள்ள ஜகதீஷ்பூர் சாலையில் நடந்தது. இப்பகுதியில், காவல் ஆய்வாளர் கோபால் மணி மிஸ்ரா சோதனைச்சாவடியில் பணியில் இருந்தபோது, மூன்று வாலிபர்கள்  ஒரு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். போலீசாரால் வாகனம் நிறுத்தப்பட்டதும், இன்ஸ்பெக்டர் அவர்கள் மீது கோபம் கொண்டதாக கூறப்படுகிறது.

வீடியோவில், இன்ஸ்பெக்டர் வாலிபர்களை தன் காலால் எட்டி உதைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் ஒருவர் கீழே விழுந்து எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். பின்னர், சிறுவர்களின் தாயும், சகோதரியும் சம்பவ இடத்துக்கு வந்தபோது, இன்ஸ்பெக்டர் தனது சீருடையை காட்டி அவர்களை திட்டியதாக கூறப்படுகிறது. மேலும், வாலிபர்களை “கொள்ளையர்கள்” எனக் கூறியும் இழிவாக  நடந்துகொண்டதாக வீடியோவில் பதிவாகியுள்ளது.

 

இந்த சம்பவத்திற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், இது போலி சோதனை என்ற பெயரில் நடைபெற்றதாகவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

சம்பவம் தொடர்பாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சைலேந்திர சிங் மற்றும் வட்டத் தலைமை அதிகாரி அகிலேஷ் வர்மா ஆகியோருடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கப்பட்டபோது, பதில் கிடைக்கவில்லை. அதேபோல், காவல் நிலையப் பொறுப்பாளர் வினோத் சிங், “வாகனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றும், வீடியோவில் காணப்படும் மற்ற காட்சிகள் AI மூலம் உருவாக்கப்பட்டவை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் சம்பவம் குறித்து போலீசார் தெளிவான விளக்கம் வழங்கத் தவிர்ப்பதன் மூலம், இந்த விவகாரத்தை மறைக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. இளைஞர்கள், உயர் அதிகாரிகளிடம் புகார் அளிப்பதாக தெரிவித்துள்ளதுடன், உண்மை நிலையை வெளிச்சமிட சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்துவருகின்றனர்.