நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் கடந்த 18-ஆம் தேதி தனது வீட்டு பரணியில் உள்ள பொருட்களை எடுக்கும் போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். அப்போது தரையில் கிடந்த ஊசி இளம் பெண்ணின் நெஞ்சில் குத்தி புகுந்தது. அந்த சமயம் வலி எதுவும் இல்லாததால் இளம்பெண் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை.

2 நாட்களுக்கு லேசான மூச்சு திணறல் மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு பரிசோதனை செய்து பார்த்தபோது அந்த ஊசி இதயம் வரை குத்தி இருந்தது தெரியவந்தது. பின்னர் அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஊசி குத்திருந்ததால் இதயத்தை சுற்றி நீர் நிரம்பி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை செய்து அந்த ஊசியை அகற்றி உள்ளனர். இதுகுறித்து அரசு மருத்துவர்கள் கூறும்போது, முதலில் ஊசி குத்தியது பற்றி அந்த பெண்ணுக்கு தெரியவில்லை.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு தான் துணி தைக்கும் ஊசி குத்தியது தெரியவந்தது. அந்த ஊசி 5 சென்டிமீட்டர் நீளம் இருக்கும். சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் அறுவை சிகிச்சை செய்து அந்த ஊசியை அகற்றி உள்ளோம். எந்தவித பக்க விளைவும் இல்லாமல் இளம் பெண் தற்போது நலமாக இருக்கிறார். அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.