வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுபவர்களைத் தடுக்க, எல்லைப் பாதுகாப்புப் படை ஒரு விசித்திரமான மற்றும் அதிரடியான திட்டத்தைப் பரிசீலித்து வருகிறது. இந்திய-வங்கதேச எல்லையானது சுமார் 4,096 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இதில் சுமார் 175 கிலோமீட்டர் தூரம் ஆறுகள் மற்றும் சதுப்பு நிலங்களால் சூழப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் வேலிகள் அமைப்பது கடினம் என்பதால், கண்காணிப்பை பலப்படுத்த அந்த நீர்நிலைகளில் முதலைகளையும், விஷப் பாம்புகளையும் விட எல்லைப் பாதுகாப்புப் படை திட்டமிட்டுள்ளது.
தற்போது மேற்கு வங்கம், அசாம் போன்ற மாநிலங்களில் உள்ள எல்லைப் பகுதிகளில் இந்த ஊடுருவல் ஒரு தொடர்கதையாகி வரும் சூழலில், இந்தத் திட்டம் ஒரு தீர்வாக அமையும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.
பாம்புகள் மற்றும் முதலைகளின் அச்சுறுத்தல் இருந்தால், உயிருக்கு பயந்து யாரும் அந்த வழியே சட்டவிரோதமாக நுழைய மாட்டார்கள் என்பதே இந்த யோசனையின் பின்னணியாகும். பிஎஸ்எப் ஆலோசனைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட இந்தத் திட்டம் தற்போது தீவிர பரிசீலனையில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
