உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் தன் சொந்த மனைவியையும், மூன்று வயது மகனையும் உயிரோடு எரித்துக் கொன்றதோடு, காயமடைந்த மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் சுத்தியலால் அடித்துக் கொன்ற கொடூர கணவனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்த லதா மற்றும் அவரது மகன் அவான்ஷ் ஆகியோரின் மரணம் விபத்தாகக் கருதப்பட்ட நிலையில், லதாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வழக்கை தலைகீழாக மாற்றியது. அவரது தலையில் இரும்புக் கருவியால் தாக்கப்பட்ட பலமான காயம் இருந்ததைக் கண்ட போலீசாருக்கு, கணவர் தான் சிங் மீது சந்தேகம் எழுந்தது.
இதனால் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. தான் சிங் தனது நண்பர்களுடன் சேர்ந்து மனைவியையும் குழந்தையையும் காரில் வைத்து உயிரோடு எரிக்கத் திட்டமிட்டுள்ளார். பெட்ரோல் ஊற்றி காரைத் தீயிட்டபோது, குழந்தை உயிரிழந்தது. ஆனால் 40 சதவீத தீக்காயங்களுடன் லதா உயிர் பிழைத்துள்ளார்.
லதா உயிர் பிழைத்தால் உண்மையைச் சொல்லிவிடுவார் என்று அஞ்சிய தான் சிங், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி வழியிலேயே மறைத்து வைத்திருந்த சுத்தியலால் லதாவின் தலையில் அடித்துக் கொன்றுள்ளார். இந்தச் செயலில் அவரது நண்பர் ரவி என்பவரும் லதாவின் கால்களைப் பிடித்துக் கொண்டு உதவியுள்ளார்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், தான் சிங்கிற்கு வேறொரு பெண்ணுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. இதற்காகவே தனது குடும்பத்தை அவர் தீர்த்துக்கட்டியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட கணவர் தான் சிங், அவருக்கு உதவிய நூர் ஹசன் மற்றும் சல்மான் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தலைமறைவாக உள்ள பிரதீப் மற்றும் ரவி ஆகியோரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனுராக் சிங் தெரிவித்துள்ளார்.
