ஓடும் ரயிலில் ஏற முயன்று, நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையிலான இடைவெளியில் சிக்கிய 63 வயது முதியவரை, அங்கிருந்த பாதுகாப்புப் படை வீரர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் கல்யாண் ரயில் நிலையத்தில் அரங்கேறியுள்ளது. ஏப்ரல் 6-ஆம் தேதி இரவு 9:36 மணியளவில், எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையிலிருந்து புறப்படத் தொடங்கியது. அப்போது சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரைச் சேர்ந்த அஸ்வினி குமார் பர்வே (63) என்ற பயணி, ஓடும் ரயிலில் ஏற முயன்றார்.
कल्याणमध्ये थरार! आरपीएफ जवान बनला देवदूत… ट्रेन-प्लॅटफॉर्मच्या फटीत अडकलेल्या वृद्धाला वाचवलं #kalyan #train #local pic.twitter.com/ifQd8cUXwG
— TV9 Marathi (@TV9Marathi) April 8, 2026
தேநீர் அருந்துவதற்காகக் கீழே இறங்கிய அவர், ரயில் புறப்பட்டதைக் கண்டு அவசரமாக ஏற முயன்றபோது நிலைதடுமாறி நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடைப்பட்ட அபாயகரமான இடைவெளியில் சிக்கிக்கொண்டார். இதனைப் பார்த்ததும் அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) காவலர் கஜானன் அம்போரே மற்றும் மகாராஷ்டிரா பாதுகாப்புப் படை (MSF) வீரர் விஷால் ஜாதவ் ஆகியோர் சற்றும் தாமதிக்காமல் மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்று, முதியவரை ரயிலுக்கு அடியில் இழுக்கப்படாமல் பத்திரமாக மீட்டனர். இந்த முழுச் சம்பவமும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
மேலும் மரணத்தின் விளிம்பிலிருந்து மீண்ட அஸ்வினி குமார், தன்னை மீட்ட வீரர்களின் கரங்களைப் பிடித்துக் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். ‘ஆபரேஷன் ஜீவன் ரக்ஷா’ திட்டத்தின் கீழ் வீரர்களின் இந்தச் சாதுர்யமான செயலைப் பாராட்டியுள்ள ரயில்வே நிர்வாகம், பயணிகள் ஓடும் ரயிலில் ஏறுவதைத் தவிர்க்க வேண்டும் என மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
