பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக வந்த ஒரு பெண் நோயாளியிடம் மருத்துவர் ஒருவர் மரியாதையின்றி நடந்துகொண்ட சம்பவம், தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. அதில், “அமைதியாக இரு, இல்லையென்றால் உன் முகத்தில் ஷூவால் அடிப்பேன்… ஜெயிலுக்கு அனுப்பிவிடுவேன்” என அந்த பெண்ணிடம் மருத்துவர் கோபமாக பேசும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

குற்றச்சாட்டுக்கு உள்ளாகிய மருத்துவர் சுஷாந்த் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரின் நடத்தையை கண்டித்தும், அதிருப்தி தெரிவித்தும் பொதுமக்கள் சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் பதிவிட்டு வருகின்றனர். அரசு மருத்துவமனையில் ஒரு பெண் நோயாளியிடம் இவ்வாறான நாகரிகமற்ற நடந்துகொள்ளல் அப்பாவி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ வெளியாகியதிலிருந்து சமூக ஆர்வலர்கள், மகளிர் அமைப்புகள் உள்ளிட்ட பலரும் “இத்தகைய மருத்துவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என கூறியுள்ளார். அரசு மருத்துவமனைகள் பொதுமக்களுக்கு பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டிய நிலையில், இப்படி ஒரு அலட்சியமும், மரியாதையற்ற நடத்தை கண்டிக்கத்தக்கது.

தற்போது, இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட டாக்டரிடம் இருந்து விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன