அழகுக்காக மக்கள் எவ்வளவு முயற்சி எடுத்தாலும், ரஷ்யாவைச் சேர்ந்த ஓர் அழகுக்கலை நிபுணரின் சமீபத்திய கூற்று உலகம் முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பாட்காஸ்டில் பேசிய அவர், கர்ப்ப காலத்தில் தனது கண் நிறத்தை நீலமாக மாற்றிய அழகு அறுவைச் சிகிச்சை தனது பிறக்காத குழந்தையின் டிஎன்ஏவையும் மாற்றும் என வாதிட்டுள்ளார். இதன் விளைவாக, குழந்தை நீல நிறக் கண்களுடன் பிறக்கும் எனவும் கூறினார்.

இந்த அபத்தமான கூற்று சமூக ஊடகங்களில் வைரலாகிய நிலையில், விஞ்ஞானிகள்  அதை முற்றிலும் நிராகரித்துள்ளனர். அதாவது ஒரு குழந்தையின் மரபணு தன்மைகள் கருத்தரிக்கும் தருணத்தில் பெற்றோரிடமிருந்து கிடைக்கும் ஜீன்களால் தீர்மானிக்கப்படுகின்றன. கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் செய்யப்படும் எந்தவொரு அழகு அறுவைச் சிகிச்சையும், பச்சைக்குத்தும், தோல் மாற்றங்களும் குழந்தையின் டிஎன்ஏவில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

 

கண் நிறம் மரபணு அமைப்பு, மெலனின் அளவு போன்ற காரணிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது; அழகுக்காக செய்யப்படும் உடல் மாற்றங்களால் அல்ல. பெண்ணின் கூற்றுகள் வெளிவந்தவுடன் சமூக ஊடகங்களில் நகைச்சுவையும் கேலியும் வெடித்தது. ஒரு பயனர் நக்கலாக,
“கர்ப்பமாகும் முன் லேசர் முடி அகற்றுதல் செய்தேன்… அப்படியென்றால் என் குழந்தைகளும் முடி இல்லாமல் பிறக்க வேண்டியது தானே?” என்று குறிப்பிட்டார்.

மற்றொருவர், “பிரசவத்திற்கு முன் ஜெர்மன் மொழி கற்றுக்கொண்டேன்; குழந்தைகளுக்கு பிறகு வெளிநாட்டு மொழி கற்றுக்கொள்ள வேண்டியதில்லை. நான் ஒரு மேதையல்லவா?”
என்று நையாண்டி செய்தார்.

இந்நிலையில்செயற்கை கருவிழி பொருத்தும் அறுவைசிகிச்சை மூலம் கண் நிறத்தை மாற்ற தொழில்நுட்ப ரீதியாக சாத்தியம் உள்ளது. ஆனால் இவை மிகுந்த ஆபத்தானவை, செலவு அதிகம், பார்வை சேதம் போன்ற அபாயங்களையும் கொண்டவை. லேசர் முறையில் கருவிழியில் இருக்கும் பழுப்பு நிற மிகளை நீக்கி கண் நீலமாகத் தோற்றப்படுத்தலாம். மேலும், ‘கெரடோபிக்மென்டேஷன்’ எனப்படும் கார்னியல் டாட்டூயிங் முறையிலும் நிற மிகளைச் சேர்க்க முடியும்.