தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில், நாகேஷ் யாதவ் என்பவருடன் திருமணத்திற்கு முன்பே கள்ளத்தொடர்பில் இருந்த சுஜாதா என்ற பெண், நாகேஷின் மனைவி மம்தாவைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இவர்களது தொடர்பைத் தடுத்ததால் ஆத்திரமடைந்த சுஜாதா, திட்டமிட்டு பெட்ரோல் மற்றும் கத்தியுடன் நாகேஷின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டின் முன் தனது 6 மாதக் குழந்தைக்கு மம்தா பாலூட்டிக் கொண்டிருந்தபோது, மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி அவருக்குத் தீ வைத்துள்ளார்.

உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையிலும், தன் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மம்தா குழந்தையைத் தூரமாக வீசியுள்ளார். இதில் மம்தா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார், குழந்தைக்குத் தீக்காயங்கள் ஏற்பட்டு ஐதராபாத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறது. இந்தக் கொடூரச் செயலைச் செய்த சுஜாதா, உடனடியாகக் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்தார்.

போலீஸார் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்தக் கொலைச் சம்பவம் அந்த கிராமத்தையே நிலைகுலையச் செய்துள்ளது. பெற்ற தாயைப் பறிகொடுத்துவிட்டு, தீக்காயங்களுடன் அந்தப் பிஞ்சு குழந்தை உயிருக்குப் போராடும் காட்சி பார்ப்பவர் எவரையும் கலங்கச் செய்கிறது. சட்டவிரோத உறவால் ஒரு அழகான குடும்பம் சிதைந்து, ஒரு உயிர் பறிபோயிருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.