திருத்தணியில் நடைபெற்ற ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப் பயணப் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து மாணவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

குறிப்பாக, நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தங்களுக்குத் தெரியும் என்று கூறி மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்ற திமுக, தற்போது சட்டமன்றத்திலேயே அது முடியாது என்று கூறி பல்டி அடித்துவிட்டதாகச் சாடினார்.

மேலும், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதோடு, மின்கட்டணம் மற்றும் விலைவாசி உயர்வால் மக்களைக் கடனாளிகளாக்கி ஸ்டாலின் ஒரு ‘பெயிலியர் மாடல்’ ஆட்சியை நடத்துவதாக விமர்சித்தார்.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையும், ஆன்மீகப் பணிகளையும் நினைவுகூர்ந்த அவர், அடுத்த தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என உறுதிபடத் தெரிவித்தார்.

திருத்தணி முருகன் கோயிலில் உள்ளூர் மக்கள் செவ்வாய்க்கிழமைகளில் தரிசனம் செய்ய இருந்த அனுமதியை திமுக அரசு ரத்து செய்ததைச் சுட்டிக்காட்டிய அவர், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அந்த அனுமதி மீண்டும் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

அதிமுக ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகள் கட்டியது போன்ற ஆக்கப்பூர்வமான பணிகள் நடந்தன என்றும், ஆனால் தற்போதைய ஆட்சியில் ஊழல் மட்டுமே மேலோங்கி இருப்பதாகவும் கூறிய அவர், வரும் தேர்தலில் மக்கள் இந்த ஆட்சிக்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று எழுச்சியுரை ஆற்றினார்.