தஞ்சாவூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் விஜய், ஆளுங்கட்சியான திமுகவை மிகக் கடுமையாகச் சாடிப் பேசினார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசை விமர்சித்த அவர், “மோசடி ஆட்சிகளிலேயே மிக முக்கியமான ஆட்சி இந்த திமுக ஆட்சி” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
இது குறிப்பாக, சிலிண்டருக்கான 100 ரூபாய் மானியம், கரும்புக்கு அறிவிக்கப்பட்ட 4000 ரூபாய் ஆதார விலை மற்றும் தகுதியுள்ள பெண்களுக்கு அரசு வேலை போன்ற வாக்குறுதிகள் என்னவானது? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
மேலும், மாநில அரசால் ஒழிக்க முடியாது என்று தெரிந்தே, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம்” என்று கூறி மக்களை ஏமாற்றியது மிகப்பெரிய மோசடி என்று விஜய் குற்றஞ்சாட்டினார். தங்களை ஒரு ‘முன்மாதிரி ஆட்சி’ என்று கூறிக்கொள்ளும் திமுக, உண்மையில் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு மக்களைத் திசைதிருப்பி வருவதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இந்நிலையில் விஜய்யின் இந்த நேரடியான மற்றும் கடுமையான அரசியல் விமர்சனம், தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், வரவிருக்கும் தேர்தலுக்கான தவெக-வின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
