தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், புதுச்சேரி அரசியலில் நிலவும் புதிய திருப்பம் தேசிய மற்றும் மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சியுடன் தற்பொழுது ஆட்சியில் அங்கம் வகித்து வரும் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுச்சேரி அரசியலில் பாஜகவுடன் சுமுகமான உறவைப் பேணி வந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு புதிய அரசியல் மாற்றத்தை முன்னெடுக்க என்.ஆர்.காங்கிரஸ் விரும்புவதையே இந்த முடிவு காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இது தொடர்பாகத் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முதலமைச்சர் ரங்கசாமியைச் சந்திக்க வந்த புதுவை மாநில பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவிடம், ரங்கசாமி இந்த அதிரடித் தகவலைத் தெரிவித்துள்ளார். தமிழகத் தேர்தலில் தவெக-வுடன் கைகோர்க்கும் தனது விருப்பத்தை வெளிப்படையாகக் கூறி, பாஜக தரப்பிற்கு அவர் எதிர்பாராத அதிர்ச்சியை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
புதுச்சேரியில் ஒரு நிலைப்பாடும், தமிழகத்தில் வேறொரு அரசியல் நிலைப்பாடும் எடுக்கும் முதலமைச்சரின் இந்த வியூகம், வரவிருக்கும் தேர்தலில் கூட்டணிக் கணக்குகளை முற்றிலுமாக மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
