தமிழகத்தில் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடப் போகும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் சூடுபிடித்துள்ளது.

தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், ஒரு மாநிலங்களவை உறுப்பினரைத் தேர்வு செய்ய சுமார் 32 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை. அந்த வகையில், திமுகவிற்கு நான்கு இடங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

இந்த நிலையில் கட்சியின் முக்கிய வழக்குகளைத் திறம்படக் கையாளுவதால், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

திருச்சி சிவா பலமுறை எம்.பி-யாக இருந்தபோதிலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இளைஞரணி காலத்திலிருந்தே கொண்டுள்ள நெருக்கமான நட்பு காரணமாக, திருச்சி சிவாவின் பெயர் மீண்டும் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிகிறது.

கனிமொழி என்.வி.என். சோமு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவதால், அவருக்குப் பதிலாக வேறொரு பெண் வேட்பாளருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

அதே சமயம், அந்தியூர் செல்வராஜுக்கு ஏற்கனவே பலமுறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாலும், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் இந்த முறை அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படலாம் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகளைச் சீரமைக்க இந்த மாநிலங்களவைத் தேர்தல் ஒரு துருப்புச் சீட்டாகப் பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் 17 எம்.எல்.ஏ-க்களைக் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி தங்களுக்கு ஒரு இடத்தை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

திமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படும் தேமுதிக, ஒரு மாநிலங்களவை இடத்தைக் கேட்டு வருகிறது. பிரேமலதா விஜயகாந்த் இதற்காகக் கடிதம் அளித்துள்ளதாகத் தெரிகிறது.

விசிக கட்சியும் தங்களுக்கு ஒரு இடத்தை ஒதுக்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.

மதிமுகவில் கடந்த முறை வைகோவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதால், இந்த முறை அக்கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்படமாட்டாது எனத் தெரிகிறது.

கூட்டணிக் கட்சிகளுக்கு ஒன்று அல்லது இரண்டு இடங்களை விட்டுக்கொடுத்துவிட்டு, மீதமுள்ள இடங்களைத் தன்னிடம் வைத்துக்கொள்ள திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. மாநிலங்களவைத் தேர்தலில் எடுக்கப்படும் இந்த முடிவுகள், வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பலமான கூட்டணியை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகக் கவனமாக வேட்பாளர்களைத் தேர்வு செய்து வருகிறார். விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் இறுதிப் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.