பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் சையத் ஆசிம் முனீர் மற்றும் ஷியா பிரிவு மதகுருக்களுக்கு இடையே நடைபெற்ற ரகசியக் கூட்டத்தில், ராணுவ தளபதி தரக்குறைவாக நடந்துகொண்டதாக எழுந்துள்ள புகார் அந்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர், ஷியா உலமாக்களின் (மத அறிஞர்கள்) பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பு, ஒரு விவாதமாக அமையாமல் ராணுவ தளபதியின் ஒருதலைப்பட்சமான உரையாகவே இருந்ததாகக் கூறப்படுகிறது. கூட்டத்தில் பங்கேற்ற மதகுருக்கள் தங்கள் தரப்பு கவலைகளைத் தெரிவிக்க முற்பட்டபோது, அவர்களுக்குப் பேச வாய்ப்பளிக்கப்படவில்லை எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தக் கூட்டத்தில் ஜெனரல் ஆசிம் முனீர் பேசிய சில கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அவர் மதகுருக்களிடம் கூறியதாவது:
“உங்களுக்கு ஈரான் மீது இவ்வளவு அன்பு இருந்தால், ஏன் நீங்கள் ஈரான் நாட்டுக்கே சென்றுவிடக்கூடாது? முகமது அலி ஜின்னா கூட ஒரு ஷியா பிரிவைச் சேர்ந்தவர் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நாட்டின் நலனே முக்கியம்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் – இஸ்ரேல் பதற்றம் உச்சத்தில் இருக்கும் வேளையில், பாகிஸ்தான் குடிமக்களைப் பார்த்து “ஈரானுக்குச் செல்லுங்கள்” என ராணுவ தளபதி கூறியது அந்நாட்டு ஷியா சமூகத்தினர் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணுவ தளபதியின் இந்த அணுகுமுறைக்கு மதத் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மௌலானா ஹஸ்னைன் அப்பாஸ் கர்தேஜி கூறுகையில், “அரசியலமைப்புச் சட்டப்படி உயரிய பதவியில் இருக்கும் ஒருவர், மூத்த அறிஞர்களை இவ்வளவு அவமரியாதையாக நடத்தியது கண்டிக்கத்தக்கது” என்றார். மற்றொரு தலைவரான அல்லாமா நசீர் அப்பாஸ் தக்வி, “நாங்கள் பேச முயன்ற போதெல்லாம் எங்களைத் தடுத்த ராணுவ தளபதி, தனது உரையை முடித்தவுடன் எங்களின் பதிலைக்கூடக் கேட்காமல் அங்கிருந்து வெளியேறிவிட்டார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் மறைவைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் ஷியா சமூகத்தினர் பிரம்மாண்டப் போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டங்களின் போது பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் உயிரிழந்தனர்.
இந்த உள்நாட்டுப் பதற்றத்திற்கு ஈரானின் மீதான அதீத பற்றே காரணம் எனக் கருதும் பாகிஸ்தான் ராணுவம், அதனை ஒடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே இந்தச் சந்திப்பும், ராணுவ தளபதியின் காட்டமான எச்சரிக்கையும் பார்க்கப்படுகிறது.
