பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளதாக ‘பொருளாதார மற்றும் அமைதிக்கான நிறுவனம்’ (IEP) வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பயங்கரவாதக் குறியீடு (GTI) அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு பாகிஸ்தானில் பயங்கரவாதச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கை கவலை தெரிவித்துள்ளது. 2025-ஆம் ஆண்டில் மட்டும் அங்கு சுமார் 1,045 பயங்கரவாதத் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. இந்த வன்முறைச் சம்பவங்களில் 1,139 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 1,595 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த 2025-ஆம் ஆண்டுப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்க்கினா பாசோ, தற்போது இரண்டாம் இடத்திற்குச் சென்றுள்ளது. நைஜர் நாடு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
பயங்கரவாதத்தின் தாக்கத்தை அளவிட உயிரிழப்புகள், காயமடைந்தோர் எண்ணிக்கை, பிணைக்கைதிகள் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் ஆகிய நான்கு முக்கியக் காரணிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அந்த அடிப்படையில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள நாடுகள். பாகிஸ்தான், புர்க்கினா பாசோ, நைஜர், நைஜீரியா, மாலி, சிரியா, சோமாலியா, காங்கோ ஜனநாயக குடியரசு, கொலம்பியா, இஸ்ரேல் ஆகும்.
இந்தப் பட்டியலில் இந்தியா 13-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் இந்தியாவில் 142 பயங்கரவாதச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 118 பேர் காயமடைந்துள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பாதுகாப்புச் சூழல் ஓரளவுக்குக் கட்டுக்குள் இருப்பதை இது காட்டுகிறது.
சர்வதேச அரசியலில் நிலவும் பதற்றமான சூழலைக் குறிப்பிட்டுள்ள இந்த அறிக்கை, ஈரான் ஒருவேளை ‘தோல்வியடைந்த நாடாக’ மாறினால், அது பயங்கரவாதக் குழுக்களின் அடுத்த புகலிடமாக மாறும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது. இது சர்வதேசப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய சவாலாக அமையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மொத்தம் 163 நாடுகளில் நிலவும் சூழலை ஆய்வு செய்து வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, உலகெங்கிலும் பயங்கரவாதத்தின் தாக்கம் உருமாறி வருவதை உறுதிப்படுத்துகிறது.
