மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகளின் தாக்குதலுக்குப் பதிலடியாக, உலகெங்கிலும் உள்ள பொது இடங்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த 21 நாட்களாகத் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஈரானின் முக்கிய ராணுவ நிலைகள் மற்றும் உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், போரை நிறுத்த ஈரான் தற்போது ஒரு புதிய ‘மிரட்டல்’ தந்திரத்தைக் கையாண்டுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தைத் தாண்டி, உலகளாவிய ரீதியில் தாக்குதல் நடத்தப்போவதை ஈரான் ராணுவத்தின் மூத்த செய்தித் தொடர்பாளர் ஜெனரல் அபோல்பாஸ்ல் ஷெகார்ச்சி தனது அறிக்கையில் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஈரானின் எதிரிகள் குறித்த முழுமையான தகவல்கள் எங்களிடம் உள்ளன. இனிமேல் அவர்கள் உலகத்தில் எந்த இடத்திலும் பாதுகாப்பாக இருக்க முடியாது. குறிப்பாக பூங்காக்கள், பொழுதுபோக்கு மையங்கள், சுற்றுலாத் தலங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்கள் கூட அவர்களுக்குப் பாதுகாப்பானதாக இருக்காது.

ஈரான் ராணுவத் தளபதியின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை மத்திய கிழக்கு நாடுகளுக்குள் மட்டுமே முடங்கியிருந்த போர், தற்போது உலகெங்கிலும் உள்ள பொதுமக்களைப் பாதிக்கும் வகையில் “நிழல் யுத்தமாக” (Shadow War) மாறக்கூடும் என அஞ்சப்படுகிறது.

மேலும் குறிப்பாக, மேலைநாடுகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. ஈரானின் இந்தத் தந்திரம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை போர் நிறுத்தத்திற்குப் பணிய வைக்குமா அல்லது மோதலை மேலும் தீவிரப்படுத்துமா என்பது உலக நாடுகளின் கவலையாக உள்ளது.