ஏர் இந்தியா நிறுவனத்தின் அலட்சியத்தால் டெல்லியிலிருந்து கனடா நாட்டின் வான்கூவர் நகருக்குப் புறப்பட்ட ஏஐ185 (AI185) விமானம், சுமார் 8 மணி நேரம் வானில் பறந்த பிறகு மீண்டும் டெல்லிக்கே திரும்பிய வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
போயிங் 777-200LR ரகத்தைச் சேர்ந்த அந்த விமானத்திற்கு கனடா வான்வெளிக்குள் நுழைய முறையான அனுமதி இல்லை என்பது, அது சீன வான்வெளியைத் தொட்ட பிறகுதான் ஏர் இந்தியா நிர்வாகத்திற்குத் தெரியவந்தது. வழக்கமாக போயிங் 777-300ER ரக விமானங்களுக்கு மட்டுமே கனடா அனுமதி வழங்கியுள்ள நிலையில், மாற்று விமானத்தை அனுப்பிய ஏர் இந்தியாவின் இந்தத் தொழில்நுட்பப் பிழை பயணிகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சுமார் 4 மணி நேரம் பயணம் செய்த பிறகு தவறை உணர்ந்த விமான நிறுவனம், நடுவானில் ‘யூ-டர்ன்’ அடித்து மீண்டும் டெல்லிக்குத் திரும்பியது. இதனால் 8 மணி நேரப் பயணம் எந்தப் பயனுமின்றிப் போனதுடன், ஒரு மணி நேரத்திற்குச் சுமார் 9 டன் எரிபொருள் வீதம் பல கோடி ரூபாய் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் தரையிறங்கிய பயணிகளுக்குத் தங்கும் வசதிகள் செய்து தரப்பட்டு, பின்னர் மாற்று விமானம் மூலம் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். “செயல்பாட்டுச் சிக்கல்” காரணமாகவே இந்தத் தவறு நடந்ததாக ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ள போதிலும், சர்வதேசப் பயணத்தில் இவ்வளவு பெரிய குளறுபடி நடந்தது விமானப் போக்குவரத்துத் துறையில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
