மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானின் முக்கிய ராணுவ தளபதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் நேற்று அதிரடித் தாக்குதல்களை முன்னெடுத்தது.
ஈரான் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) மூத்த தளபதியாகவும், செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றி வந்தவர் அலி முகமது நைனி. நேற்று ஈரான் அரசு தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், “எதிரிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் புதிய வகை ஏவுகணைகள் மூலம் பாடம் கற்பிப்போம்” என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த பேட்டி ஒளிபரப்பான சில மணி நேரங்களிலேயே, இஸ்ரேல் ராணுவம் துல்லியமான ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. இதில் தளபதி அலி முகமது நைனி உயிரிழந்தார். அவரது மரணத்தை ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
தங்களது முக்கிய தளபதி கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, ஈரான் ராணுவம் இஸ்ரேலின் முக்கிய நகரங்களான டெல் அவிவ், ஹைபா மற்றும் ஜெருசலேம் ஆகியவற்றைக் குறிவைத்து நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஏவியது. இதனால் இஸ்ரேல் முழுவதும் போர் அபாயச் சங்கொலி முழங்கியது.
அதேபோல், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் ஈரானின் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தின. 21-வது நாளாக நீடிக்கும் இந்தப் போர் தற்போது இரு நாடுகளுக்கும் இடையேயான நேரடி மோதலாக மாறியுள்ளது.
இந்தத் தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், ஈரானின் அணுசக்தி கனவு இனி ஒருபோதும் பலிக்காது. அவர்களால் இனி யுரேனியத்தைச் செறிவூட்டவோ அல்லது அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தயாரிக்கவோ முடியாத அளவுக்கு அவர்களது உள்கட்டமைப்புகள் சிதைக்கப்பட்டுள்ளன.
ஈரான் ராணுவத்தின் முக்கிய முகமாக விளங்கிய நைனியின் மறைவு, ஈரானுக்குப் பின்னடைவாகக் கருதப்பட்டாலும், அதன் எதிர்வினை மிகக் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தயார் நிலையில் வைத்துள்ளன. மேலும் சர்வதேச நாடுகள் இந்தப் போரை நிறுத்தக் கோரிக்கை விடுத்து வந்தாலும், தற்போதைய சூழல் மூன்றாம் உலகப் போருக்கான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
